
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சில தினங்களாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக எட்டாவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர் .
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சருடன் ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 'நிதிச் சுமை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது, கலைந்து செல்லுங்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்' எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை டிபிஐ அலுவலகத்திற்கு வந்த 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குண்டுக்கட்டாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர்.