நாமக்கல் அருகே, ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 19 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதை அடுத்து, சங்கத்தின் பெண் செயலாளர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக சுகுமார் என்பவரும், செயலாளராக ராணி (வயது 45) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றி வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தி வரும் மாதத்தவணை தொகையை முறையாக வரவு வைப்பதில்லை என புகார்கள் கிளம்பின. தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகளைச் சரிபார்த்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மண்டல துணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.
கடந்த ஒரு வாரமாக தணிக்கை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், 19 லட்சம் ரூபாய் கணக்கில் வராமல் மோசடி செய்திருப்பதும், இதன் பின்னணியில் அந்த சங்கத்தின் செயலாளர் ராணிக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ராணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, சங்கத்தலைவர் சுகுமாருக்கு துணைப்பதிவாளர் பரிந்துரை செய்தார். அதன்படி, சங்கச் செயலாளர் ராணியை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து சுகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராணி மீது கூட்டுறவு சங்க விதிகள் 81-ன் கீழ், உள்ளீட்டு விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.