/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1831.jpg)
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் சமூகநீதி உறுதிமொழியேற்பு நடைபெற்றது. அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் பெரியார் படம், சிலைகளுக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதே நாளில் ஒரு டீக்கடைகாரர், பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தை டீயோடு இலவசமாக வழங்கியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_452.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் சிறிய டீக்கடை நடத்திவரும் சிவக்குமார் என்ற இளைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலில் பெருஞ்சேதம் ஏற்பட்டதால், தனது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்தார். அதன் பிறகு கரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடந்த ஏழை தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார். ஓய்வு நேரத்தில் தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை வழங்கியும், நட்டும் வருகிறார். இவரது இந்த சமூக அக்கறையைப் பார்த்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் பாராட்டிவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_122.jpg)
இந்த நிலையில்தான், செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறியவர், தன்னால் இயன்றதைக் கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை, தனது கடைக்கு வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கினார். சுமார் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கியுள்ளார். இவரது இந்தச் செயலை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)