
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஆளுநரின் உதவியாளர் மற்றும் 15க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி மாலை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.