
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பகுதி வடக்கு அக்ரஹாரம் கிராமம். இதுவரை அப்பகுதியில் மதுபான கடைகள் இல்லாத நிலையில், தற்போது மற்றொரு பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மூடப்பட்ட மதுபான கடையை வடக்கு அக்ரஹாரம் பகுதியில் உள்ள விவசாய பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (10/07/2020) வெள்ளிக்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட மதுபானக்கடை திறப்பதாக இருந்த நிலையில் வடக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் மதுபான கடையை திறக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான கடையை திறந்தால் இவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், வயல்வெளியில் வேலை செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் குளத்து பகுதியில் மதுபான கடையை திறக்க இருப்பதால், அங்கு குளிக்க செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் என்று கூறிய பொதுமக்கள், மது குடிப்போர் கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசி செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வயல்வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இப்பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மதுக்கடையை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து, சில குடிமகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.