திருவாரூர் அருகே மூடிய அரசு மதுபான கடையை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கண்டன தொிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே ராதாநஞ்சை கிராமத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. அந்த கடைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தொிவித்து போராட்டங்கள் நடத்தியதால் மதுபான கடையை டாஸ்மாக நிர்வாகம் மூடியது. இந்நிலையில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் அந்த கடையை திறக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் கடையை திறக்க வேண்டாம் என புகாா் மனு அளித்தனர்.
ஆனால் இன்று அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மூடப்பட்ட மதுபான கடையை மீண்டும் இன்று திறந்து விற்பனையை தொடங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கடையை மூட வலியுறுத்தி ராதாநஞ்சை கடைவீதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த மறியல் குறித்து தகவலயறிந்த காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மதுபான கடை இனி திறக்கப்படாது என உறுதியளித்து எழுதி கொடுத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.