சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (29/07/2022) காலை 10.00 மணிக்கு, விவேகானந்தர் அரங்கத்தில் தொடங்கியது. இவ்விழாவில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேருரை நிகழ்த்தினார். அத்துடன், 69 மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். அதேபோல், விழாவிற்கு தலைமைத் தாங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஞ்சிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவிற்கு கௌரவ விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது, "தமிழர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடியவர்கள். வளர்ச்சிக்கு தடையாக உள்ளதை தகர்த்தெறிந்து மாணவர்கள் முன்னேற வேண்டும். கல்வி என்பது யாராலும் திருட முடியாத சொத்து. திராவிட மாடல் அரசு கல்விக் கண்ணைத் திறக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் கல்வி புரட்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.