ஊரடங்கு உத்தரவினால் அடர்ந்த வனத்தின் நடுவில் வசிப்பது போன்ற ஒருவித பேரமைதி நிலவுகிறது. கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள், நெடுஞ்சாலைகள், நான்குவழி சாலைகள் அனைத்தும் பேரமைதியுடன் நீண்டு படுத்துக் கிடக்கின்றன. அதிலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி சுமார் 2500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும். ஒரு மாதத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் வாகனங்கள் பயணித்த சாலை இன்று மயான அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது.
ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக உள்ளனர். நேற்று டூவீலர்களில் அங்குமிங்கும் பரந்த பரபரப்பு கூட இன்று இல்லை. அப்படிப்பட்டவர்களை காவல்துறை எச்சரித்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வழக்குப் போட்டும் கெடுபிடி செய்ததன் விளைவு இன்று மிகுந்த அமைதியோடு உள்ளன சாலைகள்.
விருத்தாசலம் திட்டக்குடி வேப்பூர் என பல்வேறு நகரங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி கடைகள் திறந்திருக்கும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஹோட்டல்கள் திறந்து இருக்கலாம். உணவுப் பொருட்கள் பார்சலாக மட்டுமே பெற்றுச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட உத்தரவுகள் மிக கடுமையாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு மட்டும் நகரங்களை நோக்கி வருபவர்களைத் தீர விசாரித்த பிறகே காவல்துறை அனுப்பி வைக்கிறது.
இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பொதுமக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இதே நிலை 21 நாட்களுக்கு நீடித்தால் நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படிப்பட்ட நிலையில் ஏழைகள் ஆதரவற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாதவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. உதாரணத்திற்கு விழுப்புரம் நகரில் உள்ள கரிகால் சோழன் பசுமை மீட்புப்படை என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் விழுப்புரத்தைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பால் மருந்து குழந்தைகளுக்கான பால் பொருட்கள் இப்படி இன்றியமையாத பொருட்களுக்கு மேற்படி நண்பர்களை செல்போன் மூலம் தொடர்புகொண்டால் அவர்கள் வாங்கி விரைந்து சென்று மக்களிடம் சேர்க்கிறார்கள்.
அதேபோல் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். இதேபோன்று திண்டிவனம் பகுதியிலும் சில தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் அயல்நாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 634 நபர்களை 528 வீடுகளில் தனிமைப் படுத்தி உள்ளனர் அதிகாரிகள். அதேபோன்று மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணி செய்து வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் அவரவர் ஊர்களுக்குச் சென்று வர தினசரி நான்கு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நோயின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் இப்போது உள்ளது போன்று ஒத்துழைப்பு தந்து அவரவர் வீடுகளில் அமைதியாக இருந்தால் நிச்சயம் கொரோனா வைரஸை வெல்வது உறுதி என்கிறார்கள் அரசுப் பணியில் உள்ள ஊழியர்கள்.