Skip to main content

“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது” - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
 TamilNadu When will schools open Official notification issued

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அதிகாரபூர்வமாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்ப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

 TamilNadu When will schools open Official notification issued

அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கதில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2024 - 2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கனமழை; பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
heavy rain; Holiday announcement for schools and colleges

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அன்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும்  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.