கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஊரடங்கில் ஐந்து கட்டங்களாக தளர்வுகளை அறிவித்தது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
இதனால், பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களில் அரசின் வழிகாட்டுதலின் படி, அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் தமிழக அரசு இதுவரை தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (20/10/2020) காலை 11.00 மணியளவில், அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.