பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி, "10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித்திரிய அனுமதிக்கக் கூடாது. வகுப்பறைகளில் இருக்கைகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ இசைவை அளித்தப் பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும். பள்ளிகளில் உடல்வெப்ப பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எளிதில் நோய்த் தொற்றும் என்பதால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். வகுப்பறையில் கூடுதல் இடமிருந்தால் கூடுதல் இருக்கை அமைத்து அதிக மாணவர்களை அமர வைக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.