Skip to main content

ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

tamilnadu schools education minister pressmeet at trichy

 

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (17/05/2021) காலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு பங்கேற்கவில்லை.

 

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்தான் பள்ளியில் சேர முடியும் என்பது பொது விதி. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்க மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மூன்றாவது மொழியைத் திணிக்கும் மறைமுக முயற்சி இருப்பதாகக் கருதுகிறோம். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். கல்வி அமைச்சரிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை அழைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் முதலமைச்சரின் உத்தரவுப்படி செயல்படுவோம். 

 

நாங்கள் அரசியலாகப் பார்க்கவில்லை; மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல் இணக்கமாக செயல்படவே விரும்புகிறோம். நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றால் புதிய கல்விக்கொள்கையை ஏற்போம். பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.