தமிழகம் முழுவதும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30- ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தாசில்தாருமான அன்பழகன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் ஜவகர்சிங் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 29) என்பது தெரிய வந்தது. அவரது காரை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என சுரேசிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதற்கு சுரேஷ் சரியாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் காரில் கொண்டு வந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.