Skip to main content

தமிழக அரசுக்கு ரூபாய் 2000 கோடி கடன் வழங்கும் உலக வங்கி!

தமிழக சுகாதாரத் திட்டங்களுக்காக ரூபாய் 2,000 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டம் ஒன்றை சட்டப்பேரவையில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றா நோய்களின் சுமையை குறைத்தல், தாய்மைப்பேறு, குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இந்த திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதியை உலக வங்கி ரூபாய் 2,000 கோடியை தமிழக அரசுக்கு  கடனாக வழங்குகிறது. இதற்காக, உலக வங்கி, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே நேற்று டெல்லியில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அரசு சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உலக வங்கி சார்பில் அதன் இந்திய இடைக்கால இயக்குனர் ஹிஷாம் அப்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிதியை தமிழக அரசுக்கு உலக வங்கி மூன்று கட்டங்களாக வழங்கும். 

 

 

 

TN

 

 

இந்த நிகழ்ச்சியில் சமீர் குமார் காரே பேசுகையில், “சுகாதார சேவைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படி என்பதில் தமிழ்நாடு ஒரு முன்னுதாரணமான மாநிலமாக உள்ளது. மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பார்த்து தங்களது மாநிலத்தில் சுகாதாரத்துறை சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பயணத்தில் தமிழ்நாட்டுக்கு உலக வங்கி உதவுவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்” என்றார். உலகளவில் சுகாதார முன்னேற்ற நாடுகளின் "நிதி ஆயோக்" பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 90 பேர் என்பதில் இருந்து ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அது போல், பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஆயிரம் பேருக்கு 30 என்பதில் இருந்து ஆயிரம் பேருக்கு 20 ஆக குறைந்துள்ளது.

 

 

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !