"சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குதல், மரங்கள் முறிந்து மின்தடை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 15 கி.மீ. வேகத்திலிருந்து 4 கி.மீ ஆக குறைந்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது. புயல் சின்னத்தால் அதிகாலை 06.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ., மேற்கு தாம்பரத்தில் 4 செ.மீ., தரமணியில் 3 செ.மீ., புழலில் 2 செ.மீ. செம்பரம்பாக்கத்தில் 1 செ.மீ., மழை பதிவானது" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.