நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, "நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்; தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாகப் பாதிப்படையச் செய்துள்ளது" என்றார்.
ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.