சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தினால் மட்டும் போதாது. இது பற்றி பேசினால் போதாது. தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. நேற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியாற்ற வந்துள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், நான் விரைவில் தமிழை கற்றுக்கொள்வேன். தாய் மொழியில் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தால் உணர்வுப்பூர்வமாக இருப்பதுடன், உண்மைப்பூர்வமாகவும் இருக்கும் என்று சொன்னார். நீதிபதி சிவஞானம் என்பவர் தமிழில் பதவியேற்ற முதல் நீதிபதி ஆவார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற இரு தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்த தீர்மானத்தை, அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபிஷா அதை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அதோடு அவர் 12 ஆலோசனைகளையும் கொடுத்தார்” எனத் தெரிவித்தார்.