இன்று (25.02.2021) காலை தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அரசு விழா நடைபெறும் கொடிசியா அரங்கிற்கு கார் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வழிநெடுகிலும் பிரதமருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு நடைபெற்ற விழாவில், ரூபாய் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அவர், "தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும்; தொழில்நகரமான கோவைக்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய திட்டங்களை தமிழகத்தில் தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். இந்தப் புதிய திட்டங்களால் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 65 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும்" என்றார். மேலும், திருக்குறளை மேற்கோள் காட்டி இந்த உரையை அவர் தொடங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.