நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை அருகேயுள்ள புளியரை நகரம், கேரள மாநிலத்தின் நுழைவு வாயில், அன்றாடம் கேரளாவுக்கு தேவையான அரிசி காய்கறி தொட்டு அணியும் ஆடை வரையிலான அனைத்து பொருட்களைக் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இவைகள் இருமாநில எல்லையில் அமைந்திருக்கிற சோதனைச் சாவடிகளைக் கடந்தே வருகின்றன.
சில வேளைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களும், கவனிப்பு அடிப்படையில் நுழைந்து விடுவதுண்டு. மேலும் சந்தடி சாக்கில், கேரளாவின் அண்டை மாவட்டமான கொல்லம், கோட்டயம் கண்ணூர் பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் உணவுக்காக பயன்படுத்தப்படும் கறிக்கோழிகளின் கடசல்கள் மற்றும் அங்குள்ள மருத்துவக்கழிவுகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்படும் சதைப் பிண்டங்கள் போன்ற கழிவுகள் ஆபத்தை விளைவிக்கும் நோய்க் கிருமிகளைக் கொண்டவை. இதுபோன்ற கழிவுகள் கொண்டுவருகிற வாகனங்கள் இரவு நேரத்தில், தமிழக எல்லைப் பகுதியான புளியரை செங்கோட்டை தேன் பொத்தை, தென்காசி பகுதிகளில் கொட்டிவிட்டுப் போவது சுகாதாரக் கேடுகளை விளைவிப்பதால் அது பிரச்சனையானதால் மாவட்ட நிர்வாகம் அதுபோன்ற வாகனங்களை தடை செய்தும், மீறி நுழைந்தால் அவைகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இவைகளைத் தொழிலாய் கொண்ட வாகனங்களில் இன்றளவும் தமிழக எல்லைப்புறத்தில் கழிவுகள் கொட்டுவதை வாடிக்கையா வைத்துள்ளன.
இதனிடையே கடந்த 21-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளாஸ்டிக் மற்றும் மருந்து கழிவுகளை ஏற்றி வந்த 15 கேரளா லாரிகள் சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளன. இவைகளில் சில மருத்துவக் கழிவுகளை கொண்டது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா மூன்று லட்சம் அபராதமும், மற்றவைகளுக்கு தலா 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 13 லாரிகளின் உரிமையாளர்கள் அபராத தொகையை கட்டியுள்ளனர். அவைகள் தென்காசி கோட்டாட்சியர் சவுந்திரராஜன், வட்டாட்சியர் வெங்கடாச்சலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளை திரும்பவும் கேரளாவுக்கே அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கின்றார்கள் வருவாய் வட்டார துறையினர்.
ஆனால் தொடர்புடைய கேரள வாசிகளோ, அவைகள் இரும்புக் கழிவுகள் என்கின்றார்கள்.