சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா..' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து சமந்தா நடனமாடிய இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறி ஆந்திராவில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் போர்க்குரல் எழுந்துள்ளது. இந்தப் பாடல் ஆண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும், இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் எனவும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவரும் வழக்கறிஞருமான அருள்துமிலன் கூறுகையில், ''இந்தப் பாடலைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் இதற்கு எதிரான வழக்கை தமிழகத்தில் சந்தித்தே ஆக வேண்டும். இந்தப் பாடலுக்கு நடனமாடிய சமந்தா, பாடலை எழுதிய பாடலாசிரியர், பாடலைப் பாடிய ஆண்ட்ரியா, இசையமைப்பாளர், படத்தின் இயக்குநர் என அனைவர் மீதும் வழக்குத் தொடுக்கப்படும்'' எனவும் எச்சரித்துள்ளார்.
சென்னையில், ‘புஷ்பா’ படத்தை விளம்பரப்படுத்த நேற்று (14.12.2021) நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, "‘ஓ சொல்றியா மாமா’ பாடல் இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.