இல்லாத அதிகாரத்தை மீறிச் செயல்படும் ஆளுநர் மீது வழக்கு தொடுத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், ''மணிப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மணிப்பூர் பாலியல் கூடமாக திகழ்ந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் அரசே செய்கிறது. பெண்கள் கதறுகிறார்கள். அந்த மாநிலத்திற்கு சென்று பிரதமர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதைப்பற்றி பேசவும் இல்லை. விளக்கம் தரவும் இல்லை. தீவிரவாதிகள் ராணுவ முகாமில் நுழைந்து 7 லட்சம் துப்பாக்கிகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். அதைப்பற்றி உள்துறை அமைச்சர் எதுவும் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையில் அங்கே ஒரு முதலமைச்சர் இருக்கிறார். ஆனால் அந்த மாநில அரசைக் கண்டிப்போம், கலைப்போம் என்ற வார்த்தை பாஜகவிடமிருந்து வரவில்லை. ஆனால், அதை விட்டுவிட்டு அவர்கள் தமிழகத்தைக் குறி வைக்கிறார்கள். மேற்கு வங்கத்தைக் குறி வைக்கிறார்கள். மாநில அரசு சரியில்லை என்று பேசுகிறார்கள். எவ்வளவு அப்பட்டமாக பிரதம மந்திரியும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக இதில் தெரிந்து கொள்ள முடிகிறது.
மணிப்பூரில் அமைதி நிலவியது என்று சொன்னால் தான் அது சரியான வார்த்தை. விரைவில் அமைதி நிலவும் என்று சொன்னால் அங்கு அமைதி அங்கு இல்லை என்று தான் அர்த்தம். ஆறு மாத காலமாக மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தவில்லை என்றால், நீங்கள் எல்லாவற்றையும் முடித்து விட்டீர்கள். அங்கு எதிர்த்தரப்பு என்பதே கிடையாது. அவர்கள் வாயிழந்து போய் விட்டார்கள். மணிப்பூரை காலி செய்துவிட்டு வேறு மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். எனவே அங்கு இருப்பது பாஜகவின் குண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். எனவே தான் விரைவில் அமைதி திரும்பும் என்று சொல்கிறார்.
ஆளுநர் எவ்வளவு அநாகரிகமானவர்; ஆர்எஸ்எஸ் விடவும் தீவிரமானவர் என்பதை அவருடைய வார்த்தைகள் தெளிவுபடுத்துகிறது. நீட்டை தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவில்லை. நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அந்த தேர்வு தமிழக மாணவர்களுக்கு ஒத்து வராது. ஏனென்றால் தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் இருக்கிறது. நீட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கிறார்கள். படித்தது ஒன்று ஆனால் தேர்வு மற்றொன்று என்றால் எவ்வளவு பெரிய அறிஞர்களாலும் அதில் வெற்றி பெற முடியாது. அதனால் தான் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டுமென்றால், அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் வேண்டும். அதை ஐந்தாம் வகுப்பில் இருந்து கொண்டு வர வேண்டும். 10 வருடம் கழித்து தான் இங்கு நீட் எழுதலாமே ஒழிய இப்பொழுது எழுத முடியாது.
ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. எல்லாக் கட்சிகளும் ஆதரித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு முறைக்கு பதிலாக இரண்டு முறை அனுப்பியும் ஆளுநர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அதற்கு அவருக்கு அதிகாரமே இல்லை. நாளை வழக்கு தொடுத்தாலும் அவர் கைது செய்யப்படுவார். தமிழகத்தில் அவர் அத்துமீறி நடந்து கொண்டார் என வழக்கு தொடர்ந்தால், கைது செய்யலாம். மாநில அரசுக்கு அந்த உரிமை இருக்கிறது. அவர் அதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.