Skip to main content

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி; ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Tamil Nadu Government's response to the Governor's questions about Chairmanship of TNPSC

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடந்த ஓராண்டாக யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் பின்னர், சில நாட்களுக்கு முன்பு, தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவையும், 10 உறுப்பினர்கள் பதவிக்களுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது. ஆனால், இதற்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்து கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார். 

 

மேலும், ஆளுநர் மாளிகையில் இருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு செய்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது?அதே போல், உறுப்பினர்கள் தேர்வில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பாக முறையான விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்றும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இவர்களுக்கெல்லாம் நிச்சயம் நிவாரணம் உண்டு” - சென்னை மக்களுக்கு பெரும் ஆறுதல் செய்தி 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
- Tamil Nadu Government explanation Why provide Rs.6,000 in cash for cyclone michaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (09-12-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை எனப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால், இந்த நிவாரணத் தொகை ரூ. 6,000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என்று விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க என்.ஐ.ஏ மனு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
NIA petition to investigate rowdy Karukka Vinoth

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் அன்று பணியில் இருந்த காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என பலரையும் விசாரிக்க கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.