கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''இந்த கள்ளச்சாராய சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் தொடர்பு உள்ளவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதனால் உறுதியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம். இதை ஒரு சம்பவமாக பார்க்க கூடாது. எதற்காக இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் இது போன்ற சம்பவங்களுக்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள்; இதில் தொடர்புடையவர்கள் யார்; கடந்த 20 ஆண்டு காலமாக யார் யார் இது போன்ற கள்ளச்சாராய சம்பவங்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்; யார் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது; எங்கிருந்து கள்ளச்சாராயம் வருகிறது; எங்கே போகிறது; வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது அதற்காக சிபிஐ விசாரணை வேண்டும்.
சிபிசிஐடி-ஐ மதிக்கிறவன் நான். அதைத் தப்பு சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு இவர்கள் பிரஷர் கொடுப்பார்கள். இதில் அமைச்சர்களுக்கு, மாவட்டச் செயலாளர்களுக்கு தொடர்புள்ளது. அவர்கள் பிரஷர் கொடுப்பார்கள். அது நேர்மையாக நடக்காது. உண்மையாக நடக்காது. கண் துடைப்புக்காக பத்து பேரை கைது செய்வார்கள். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. அதற்கு முதலில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடையை முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக மூடுங்க.
குடி நோயாளிகளை தமிழக அரசு உருவாக்கி வைத்துள்ளது. மது இல்லாமல் அவர்கள் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு மக்களை தள்ளியுள்ளார். 150 ரூபாய்க்கு பதிலாக இங்கு போய் 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் குடித்துவிட்டு சாகிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பையன் சொல்கிறான் காலை 4:30 மணிக்கு எழுந்தவுடன் குடிப்பானாம். அவனுக்கு வயது 21. இன்னைக்கு அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் முதலில் குடிப்பேன் என்று சொல்கிறான். இதுதான் திராவிடம். ஆறு வருடமாக குடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான். 15 வயதிலிருந்து குடிப்பது என்றால் என்ன நிலைக்கு தமிழ்நாடு போகின்றது என்று பாருங்கள்.
டாஸ்மாக் கடையின் பார் எல்லாவற்றையும் திமுக கட்சிக்காரர்கள் நடத்துறாங்க.பாரில் 24 மணி நேரமும் டாஸ்மாக் சரக்கு கிடைக்கிறது. உங்களுடைய நிறுவனர் அண்ணா எத்தனை முறை சொன்னார் 'மதுவால் வருகின்ற வருமானம் குஷ்டரோகி கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது; அது ஒரு பொழுதும் எனக்கு வேண்டாம்' எனத் திமுக நிறுவனர் அண்ணா சொன்ன பிறகும் இவர்கள் அதைத் திணிக்கிறார்கள். விற்கவில்லை இவர்கள் திணிக்கிறார்கள். செந்தில் பாலாஜி உள்ளே இருக்கிறார். அவர் இருந்தால் இந்நேரம் 70 ஆயிரம் கோடிக்கு போய் இருக்கும் தமிழ்நாட்டில் மது விற்பனை. இப்பொழுது 55,000 கோடி தான் இருக்கிறது''என்றார்.