Skip to main content

“எங்க முதல்வர் கொடுக்கச் சொன்னார்” - துபாயில் அன்பளிப்பு வழங்கிய அமைச்சர்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Tamil Nadu Government gifted 1000 books to Dubai library

 

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2021 ஆம் கல்வியாண்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தேர்வாகும் மாணவர்களை ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 67 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து, இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வியாழக்கிழமையன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய்க்கு சென்றடைந்தனர்.

 

துபாய் சென்ற மாணவர்கள் அங்குள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துபாயின் லூவர் மியூசியம், கஸ்ர்-அல்-வதன் அரண்மனை, ஜெபல் அலி இந்து கோவில் ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து துபாய் சென்ற மாணவிகள் பேசும்போது, “எங்களுக்கு இது கனவு மாதிரி இருக்கு. துபாய்க்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. துபாய் ஏர்போர்ட்ல எங்களுக்கு பூ கொடுத்து வரவேற்றாங்க. இந்தப் பயணத்த மறக்கமாட்டோம்” என உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

 

அதேபோல், துபாயில் இருக்கும் முக்கிய நூலகங்களில் ஒன்றான முகமது பின் ரஷித் நூலகத்துக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அப்போது, அந்தப் பிரம்மாண்ட நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் 1000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. துபாய் வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் வழங்கியிருந்த 1000 புத்தகங்களை நூலகத்தின் இயக்குனர் முஹம்மத் பின் சாலிம்மிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இது தொடர்பான வீடியோக்காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.