Skip to main content

குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Tamil Nadu government gave good news to family card holders!

ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நாளது தேதியன்று (27.05.2024) 82 லட்சத்து 82 ஆயிரத்து 702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75, லட்சத்து 87 ஆயிரத்து 865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu government gave good news to family card holders!

மேலும் 24 லட்சத்து 96 ஆயிரத்து 510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33 லட்சத்து 57 ஆயிரத்து 352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8 லட்சத்து 11 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு மற்றும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு நாளது தேதியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எனவே குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்