/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cyclone-mic-art_7.jpg)
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-art-flag-ind_18.jpg)
அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-sec-art_19.jpg)
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)