புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தங்கம் கடத்தி வருவதும் வழக்கமாகிவிட்டது. கடந்த வாரம் இலங்கைக்கு கடத்த கொண்டு சென்ற 30 கிலோ கஞ்சா பண்டல்களையும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் ஒரு இலங்கை படகுடன் ஒரு இந்திய படகு அருகருகே நிற்பதைப் பார்த்த மீனவர்கள், அருகில் செல்லும் போது இந்திய படகில் இருந்து பண்டல்கள் இலங்கை படகுக்கு மாற்றியதும் வேகமாக சென்றுவிட்டனர். இலங்கை கடத்தல் படகில் வந்த அந்த 3 பேர் கொண்ட படகை விடாமல் துரத்திய மீனவர்களால், பிடிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் இந்திய படகில் இருந்து கஞ்சா பண்டல்களை இலங்கை படகில் மாற்றிய குமரப்பன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கர்(32), செய்யாணம் பாண்டி மகன் ராஜதுரை (26) ஆகிய இருவரையும் கையோடு பிடித்து வந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள், கடலோர காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில் பல திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரனையில், “ நான்(சங்கர்) டிப்ளமோ படித்துவிட்டு துபாயில் பல வருடங்கள் வேலை செய்தேன். பின்பு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்த நான், எனது தந்தையின் படகில் கடலுக்கு சென்று வந்த போது, கோட்டைப்பட்டினத்தில் ஷாப்பிங் சென்டர் நடத்திவருபவர் கொடுக்கும் பண்டல்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகில் மாற்றி விட்டால், ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று, சங்கரின் சித்தப்பா ஆசை வார்த்தை கூறினார். அவரோடு சில முறை கஞ்சா பண்டல்களை கொண்டுபோய் மாற்றி விட்டோம்.
கஞ்சா பண்டல்களை தொடர்ந்து இலங்கைக்கு கடத்தும் புதுக்கோட்டை பெண்ணிடம் நேரடியாக பேசும் போது, ஒரு முறை கடலுக்குள் போய் பண்டல்களை மாற்றினால் ரூ.50 ஆயிரம் கொடுக்கிறேன் என்றார். அப்படியே இப்போது பண்டல் கொண்டு போகனும், நீங்கள் கொண்டு போரிங்களான்னு கேட்டார். சரின்னு சொல்லி எங்க சொந்தக்காரரான, மலேசியாவில் இருந்து உறவினர் இறப்பிற்காக வந்த ராஜதுரையை அழைத்துகொண்டு, வன்னிச்சிப்பட்டினத்தில் செந்தில் என்பவரின் உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து தலா 20 கிலோவில் 6 பண்டல்களை எடுத்துக் கொண்டு 5 நாட்டிக்கல் மைலில், அவங்க அடையாளம் சொன்ன இலங்கை படகில் மாற்றி விட்டோம். இது வரை 6 முறைக்கு மேல் கடத்தி இருக்கிறோம்.
இந்த கஞ்சா பண்டல்கள் புதுக்கோட்டை பெண் நேரடியாக கோட்டைப்பட்டினம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நடத்தி வருபவர் மூலமாக இலங்கை பேசாலை நீயூட்டன், ராஜ் ஆகியோருக்கு அனுப்புறாங்க. எங்களுக்கு நடுக்கடலுக்குள் கொண்டு போய் மாற்றி விட கூலி கொடுப்பாங்க. ஆனால் இந்த முறை நாங்க மாற்றும் போது கோட்டைப்பட்டினம் மீனவர்கள், நாங்கள் கஞ்சா பண்டல் மாற்றும் போது பார்த்துட்டு விரட்டினாங்க. இலங்கை கடத்தல் படகு வேகமாக போயிட்டாங்க. ஆனாலும் நம்ம மீனவர்கள் விடாமல் விரட்டினாங்க. ஆனால் அவங்களை பிடிக்க முடியல. உடனே எங்களை பிடிச்சு வந்து உங்களிடம் ஒப்படைச்சுட்டாங்க” என்றார்.