கோவையில் சரவணம்பட்டியை அடுத்துள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டி.ஜி.பி சைலேந்திரபாபு கோவை வந்திருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் ஈரோடு சென்றார். கோவையில் தடகள போட்டி பரிசளிப்பு விழாவை முடித்துக்கொண்டு ஈரோடு செல்லும் போது திடீரென கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு திடீரென சென்ற அவரை காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் டி.ஜி.பி யை வரவேற்றனர். பின்னர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யவும், குற்றச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், மனு கொடுக்கக் கூடிய மக்களிடம் கனிவோடு அன்போடு நடக்க வேண்டும்; காவல் நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்; கரோனா, டெங்கு பாதிப்புகளில் மக்களைக் காத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர் ஈரோட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் காவல் நிலையத்தில் புகுந்து ஆய்வு செய்த சிசிவிடி காட்சிகளும் வெளியாகியுள்ளது.