Skip to main content

‘தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம்’ - மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Tamil Nadu Chief Minister's letter to the Central Government for Mullai Periyar Dam

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லையென்றால், தேவைப்படும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்தும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒன்றிய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் விளாசல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
CM MK Stalin says ADMK is looking for advertisement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.

சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார். 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.