மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (31/03/2022) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரை தனித்தனியே நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (01/04/2022) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிதி சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இச்சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று (01/04/2022) மாலை மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்திக்கும் முதலமைச்சர், தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்க உள்ளார்.