தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.

Advertisment

அதன்படி தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 4 பேர் தமிழக அமைச்சரவையில் புதியதாக இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (29.09.2024) மாலை 03.30 மணியளவில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புதிதாக அமைச்சராகப் பதவியேற்ற ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர் ஆகியோருக்கு பதவியேற்பு உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். இதனையடுத்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பூங்கொத்துகளைக் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

Advertisment

அதே சமயம் தமிழக அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.