
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (05/03/2022) மாலை 05.00 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, பழனிவேல் தியாகராஜன், எ.வ.வேலு, எம்.ஆர்.பன்னீர்செல்வம், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவையைக் கூட்டுவது குறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோல், மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்த முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, மதுரையில் இருந்து மூன்று அமைச்சர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.