காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பு காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற கருத்தின் அடிப்படையில் நேற்று மாலையே பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய பேருந்துகளும், தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் இருந்து 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 80 பேருந்துகளும் என மொத்தமாக 430 பேருந்துகளும் கர்நாடக மாநிலத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.