மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐம்பதாண்டுகள் ஊட்டி, அடுத்த ஐம்பது ஆண்டுகள் மைசூர் என நூறு ஆண்டுகள் சிறைப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் தமிழ் தொல்லியல் ஆவணங்கள் தமிழக வரலாற்றினையே மாற்றி எழுத்தக்கூடிய பெரும் ஆவணங்களாகும். அவற்றை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசிகவின் கெளதம சன்னா வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் கிருபாகரன், மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன்படி, நேற்று மைசூரில் உள்ள ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறையானது தமிழ்த் கல்வெட்டு ஆவணங்களை தமிழகத்திற்குக் குறிப்பாகச் சென்னைக்கு கொண்டு வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் சென்னையிலுள்ள இந்தியக் கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதற்காக நீதிமன்ற ஆணைக்கிணைங்க தமிழகத்தில் அந்த துறைகளின் பெயரையும் மாற்றி உடனடியாக அது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக பேசிய கெளதம சன்னா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘இதுநாள் வரை ஒன்றியத் தொல்லியத்துறை காப்பிலுள்ள ஆவணங்களை அவ்வமைப்பு முறையாகப் பராமரிக்காததினால் ஏராளமான ஆவணங்கள் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. நீதிமன்றத்தில் ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறை அளித்த அறிக்கையில் தமிழ் கல்வெட்டு ஆவணங்களின் எண்ணிக்கை முரண்பாடாகக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என்பதே இதற்கு போதுமான சான்றாகும். அதுமட்டுமில்லாமல பல ஆவணங்கள் காணவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளக் கிடைக்கும் இந்த அரிய கல்வெட்டு ஆவணங்களை தமிழக அரசின் தொல்லியல்துறையின் கீழ் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழகத்திற்கு ஆவணங்கள் வந்து சேர்ந்த உடன் அவை உடனடியாக மின்னாக்கம் செய்யப்பட்டு, அவை மின்படிகளாக அதற்கான தனி இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மின்னாக்கம் செய்யப்பட்ட கல்வெட்டுப்படிகள் உடனடியாக அச்சிடப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டும். அந்தத் தொல் ஆவணங்களை ஆய்வு செய்யத் தேவையான ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஆய்வு செய்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வரலாற்று ஆய்வாளர்கள் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். அழிக்கப்பட்ட அல்லது தொலைந்து போன அல்லது எண்ணிக்கை முரண்பாடு குறித்து ஒன்றிய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கொடுத்த அறிக்கையின் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.