Skip to main content

“தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையே உறுதிமொழி ஏற்றுள்ளார்” - உ. வாசுகி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Tamil Governor has sworn to speak untruth says U.Vasuki

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அருள் பிரகாச இராமலிங்க வள்ளலார் 200 சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்துப் பேசுகையில், “இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் கருத்தரங்கம் அமைந்துள்ளது.

 

தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையும், நடப்பதையும், உறுதிமொழி எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தவர். இவரைச் சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி பொய்யாகப் பேசியுள்ளார்.

 

ஒன்றியத்தில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் தான் ஆட்சியில் உள்ளனர். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் இதுதான் உண்மையான வாழ்க்கை நெறியென மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால் பாஜகவினரின் கருத்துக்கள் செயல்பாடுகள் வள்ளலாருக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

 

மோடியின் ஆட்சியில் பசியும் வறுமையும் ஏற்படக்கூடிய பொருளாதார கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.  பசி, வறுமை கணக்கெடுப்பில் 127 உலக நாடுகளில்  107வது இடத்தில் இந்தியா உள்ளது. ஜாதி, சமயம், மூடநம்பிக்கை, மதங்களை வள்ளலார் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். ஆனால் மோடி அரசு இவற்றை மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகளை, தத்துவத்திற்கு ஏற்பத் தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் சொல்லுகிற மதவெறி அரசியலை நிராகரிப்பதில் முன் வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சனாதனத்தை எதிர்ப்பதில் வலுவாக உள்ளது. வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; அன்பு செலுத்தப்பட வேண்டும். அனைத்து மக்களும் எந்தச் சாதி, மதமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி, வேலை வாய்ப்பு பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகக் கொள்கை வகுத்துப் போராட்டக் களத்தில் திகழக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.

 

மேலும்  பெண்களும், குழந்தைகளும் வன்முறைகளால் பாதிக்கப்படும் போது முதலில் களத்தில் இறங்குவது மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச் சென்ற இப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளைப் பொதுவுடைமை தத்துவத்தோடு இணைத்துத் தமிழகத்தில் அப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிற இயக்கமாகச் செங்கொடி இயக்கம் இருக்கிறது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் தேன்மொழி  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா மற்றும்  நகர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டம் தொடங்கியது முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பேசுவதைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர் குடை பிடித்தவாறு, மழையில் நனைந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா போதையில் பெட்ரோல் திருட்டு; தட்டிக் கேட்டால் மிரட்டல்- அச்சத்தில் பொதுமக்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Gasoline theft under the influence of ganja; Intimidation on knocking - public in fear

                                                      கோப்புப்படம் 

சிதம்பரம் பகுதியில் கஞ்சா போதையில் நள்ளிரவில் வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், வரதராஜ நகர், தமிழன்னை நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், குருதேவ் நகர், முத்தையா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது. இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவர்களது வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்கு உள்ளே உள்ள போர்டிகோவில் அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் இருசக்கர  வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோலை திருடி செல்கின்றனர். இதனால் காலையில் எழுந்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.  மேலும் காலை நேரத்தில் அவசர வேலையாக வெளியில் செல்பவர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில்  இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து அதில் ஒருவர் வீட்டின் சுவர் மீது எறி குதித்து அங்கிருந்த 2 இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் நாய்கள் குறைத்துள்ளது.  வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் பாட்டிலை போட்டுவிட்டு மதில் சுவர் மீது எகிறி குதித்து ஓடி 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது வீட்டின் உரிமையாளரை மிரட்டும் தோணியில் சைகை காட்டி சென்றனர். இவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் இது போன்று தொடர்ந்து சுற்றுகிறார்கள் என்றும் பல்வேறு வீடுகளில் உள்ள இருசக்கர வாகனங்களில்  தொடர்ந்து பெட்ரோல் திருடி வருகிறார்கள். இரவு நேரத்தில்  போதையில் இருப்பதால் இவர்களிடம் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள் எனவே காவல்துறையினர் இதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தில் துறவாடி தெருவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதேபோன்று பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.