திருச்சியில் சிண்டிகேட் வங்கியின் மேலாளரும், அவரது குழந்தையும் தூக்கில் தொங்கிய நிலையில், மேலாளரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிண்டிகேட் வங்கியின் SRC கிளை மேலாளரான ராமசுப்பிரமணியன், அதே பகுதியில் கணேஷ் தர்ஷன் அபார்ட்மென்டில் வசித்து வந்தார். வியாழனன்று வழக்கம்போல மதிய உணவுக்காக சென்ற அவர், யூகேஜி பயிலும் மகள் ஆருத்ராவை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, விற்பனை பிரதிநிதியான ராமசுப்பிரமணியனின் மனைவி ஆவுடையம்மாள், வீட்டுக்கு வந்தபோது, கணவரும், குழந்தையும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஃப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால், ஆவுடையம்மாள் மருத்துவமனை முன்பு வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதனிடையே, வங்கி மேலாளர் குழந்தையுடன் தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமசுப்பிரமணியன் சில நிறுவனங்களுக்கு வரம்புமீறி கடன் கொடுத்ததாகவும், அதனால் அண்மைக் காலமாக மன குழப்பத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.