சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (27/06/2022) காலை 10.00 மணிக்கு கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செம்மலை, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஜெயக்குமார், "அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால், அ.தி.மு.க.வை வழிநடத்த தலைமையைத் தேர்ந்தெடுப்பது குறித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்திற்கு வர முடியவில்லை என ஐந்து பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை உண்டு. இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன; அவை எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது.
அ.தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும். பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். தலைமை நிலையச் செயலாளர் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். காவிரி, கச்சத்தீவு பிரச்சனைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தது தி.மு.க.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடிப்படை விதிகளே தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு பல துரோகங்களைச் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் அவரது உடன் பிறந்த ஒன்று. ஓ.பன்னீர்செல்வத்தின் துரோகங்களுக்கு நிறைய உதாரணங்களைக் கூற முடியும். ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா என்பதற்கு பொதுக்குழுவில் விடை கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முதல்வரைச் சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்ததை மறக்க முடியுமா?
அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை; அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி தான். கிழிக்கப்பட்ட பேனரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.