Skip to main content

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

SV Sehgar apologizes unconditionally!

 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு தகவல்களை ஃபேஸ்புக் வாயிலாகப் பகிர்ந்தது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்கள் எழுந்ததோடு பெண்கள் அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, அமெரிக்க வாழ் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவைத் தான் பகிர்ந்ததாகவும், இதற்காக நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக எஸ்.வி.சேகர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் முன்பு எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் எனவும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஃபேஸ்புக்கில் எழுதிய அந்த அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

 

அதன்படி கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த 4 வழக்குகளில் தனித்தனியாக பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதி ஒத்தி வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்