
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் சரகம், கீழப்பிடாகை ஊராட்சிக்கு உட்பட்ட, சிந்தாமணி நடுத்தெருவைச் சேர்ந்த கலைவாணன்-விஜயராணி தம்பதியினர் மகன் சூர்யா(20). தந்தையை இழந்த சூர்யா, தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சூர்யா, கடந்த 21ம் தேதி இரவு கீழையூர் காவல் சரகம், காமேஸ்வரம் ஊராட்சியில் உள்ள அவரது தாத்தா பன்னீர்செல்வம் என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜூன்.22ம் தேதி காலை காமேஸ்வரத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் கத்தரி சாகுபடி வயலில் சூர்யா இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சூர்யாவின் பிரேதத்தை அவரது தாத்தா பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் சிந்தாமணிக்கு கொண்டு வந்து, சிந்தாமணியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மேற்கண்ட சூர்யாவின் சித்தப்பா கார்த்திகேயன் (46) கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கீழையூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து சூர்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், கீழையூர் காவல் ஆய்வாளர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அவரது உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
நாகை அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.