Skip to main content

நாய்கள் கடித்து படுகாயம் அடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Surgery completed for girl who was bitten by dogs

சென்னை நுங்கம்பாக்கம் மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை வெளியில் சென்றுள்ளார். அதனால் அவரது மனைவி மோனிஷா பூங்காவின் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது 5 வயது மகள் சுபஷா என்பவரும் இருந்துள்ளார். இந்தச் சிறுமி பூங்காவில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இரண்டு வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைப் புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்களும் கடித்து குதறியது. இதனால் சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை புகழேந்தி ஏற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Surgery completed for girl who was bitten by dogs

அதே சமயம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே சிறுமியைக் கடித்து குதறிய ராட்வைலர் நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் புகழேந்தி இரு நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு இன்று (09.05.2024) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், மே 14 ஆம் தேதி வீடு திரும்ப இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் மருத்துவ செலவிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Armstrong case Petition to take 3 people into custody and investigate

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் (20.07.2024) கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் திமுக; இன்று முக்கிய ஆலோசனை!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
DMK prepares for assembly elections Important advice today

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகளை இந்த குழு மூலம் மேற்கொள்ளப்படும் என நேற்று (20.07.2024) அறிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின்  கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் திமுக தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘ஒருங்கிணைப்புக்குழு’ அமைக்கப்படுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் ஒருங்கினைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (21.07.2024) மாலை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.