பொய்யாக புனையப்படுகின்ற வன்கொடுமை புகார்களை தடுக்கும் நடவடிக்கையாக உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவில் பதிவாகும் வழக்குகளில் தவறாகவும், உள்நோக்கத்தோடும் புனையப்படும் வழக்குகள் ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் உரிமைகளை மறுப்பதாக அமைகிறது. மற்ற சாதிகளை சார்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் இருக்கின்ற பகையின் காரணமாக பழிதீர்க்கும் நடவடிக்கையாக எஸ்.சி, எஸ்.டி பிரிவினரில் ஒருவரை தூண்டி வழக்கு போட வைப்பது எதார்த்தத்தில் இருக்கின்ற உண்மை. இப்படிப்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கைகள் சாதிகளுக்கு இடையேயான மிகப்பெரிய வன்முறைகளுக்கு வித்திட்டு விடுகிறது.
வன்கொடுமை சட்டப்பிரிவு எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பாதுகாக்கும் கேடயமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே வாளாக மாறி மற்றவர்களை துன்புறுத்த துணிவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இதை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், கீழமை நீதிமன்றங்களில் முன் ஜாமீன் வழங்க முடியும் என்பதும் இந்தியாவில் பெருவாரியான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. இதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு சிலரால் தூண்டப்படும் கலவரங்களும், வன்முறையும் தடுக்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை அதிகாரிகள் இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’’