இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிமன்ற செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் அவசர வழக்குகள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தலைமையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் மே 1 முதல் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.