Skip to main content

“உச்சநீதிமன்றத்தை அணுகுவது தான் எங்களது கடைசி முடிவு” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

"Supreme Court is our final decision" - Minister Duraimurugan interview

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரைத்தார். மேலும், விரைவில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''காவிரி பிரச்சனையை பொறுத்தவரை நேற்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு கடைசி முடிவு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தான். 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கர்நாடக முடிவு தெளிவாகத் தெரிந்து விடும். பிறகு வழக்கில் அதை இணைத்துக் கொண்டு எங்களுடைய வழக்கறிஞர்கள் பேசுவார்கள்'' என்றார்.

 

‘கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய நீர்வரத்து இல்லை என்று சொல்கிறார்கள்; தமிழக அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளும் அங்கு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தாராளமாக அந்த கோரிக்கை வைப்போம். இன்னும் சொல்லப் போனால் உச்சநீதிமன்றமே இதனைப் பார்க்கலாம். அவர்களே ஒரு குழுவை அமைத்து கண்காணிக்கலாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்