இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’படத்தைத் தொடர்ந்து ரஜினியை வைத்து இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. கல்வி மற்று போலீஸ் என்கவுண்டர் குறித்துப் பேசியுள்ள இந்த படம் பலரின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் தா.செ.ஞானவேலுடனான தனது சந்திப்பு குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்
அதில், “ஒரு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும், அதுவும் ஒரு தமிழ் வழக்கறிஞர் எப்படி இருந்தார் என்பது உலகிற்கு எடுத்துக் காட்டிய இயக்குநர் தா.செ. ஞானவேலுவை சமீபத்தில் சென்னையில் சந்தித்தேன். 'ஜெய் பீம்' படத்தில் வரும் ‘தலைகோதும் இளங்காத்து சேதி கொண்டுவரும்...’ என்ற பாடலை தினந்தோறும் கேட்டுவிடுவேன். அதை அவரிடமே சொன்னேன். அந்த பாடல் லட்சியத்தில் தொடங்கி அறத்தில் முடிந்திருக்கும். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளின் நடுவே அவரின் அமைதியான அறையில் சந்திப்பு நடந்தது.
வழக்கறிஞர்கள் அறம் தவறக் கூடாது என்பதை எப்போதும் சொல்லும் ஒரு அறம் என்னை அழைத்து, அல்ல இழுத்துச் சென்றது. இயக்குநர் ஞானவேலின் தோற்றம் அமைதியானது; ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய ஜாம்பவான்களை இயக்கும் ஆற்றல். சட்டம் மீதான ஆர்வத்தை அழகாக வெளிப்படுத்தினார். சட்டம் படிக்கலாமா? என்று கேட்டார். சட்டப்படிப்பு படிக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது என்று சொன்னேன். அவரின் ஆர்வம் சமூக சிந்தனை பாராட்டதக்கது.
சட்டம் படித்து, சமூக சிந்தனையும் கொண்டவர்களே வழக்கறிஞர் பணிக்கு வருகிறார்கள். சமூகம் குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்ட வழக்கறிஞர்கள் நல்ல வழக்கறிஞர்கள் ஆகிறார்கள். நம்பகமான வழக்கறிஞர்களின் ஆலோசனை பல்வேறு சிக்கலை தீர்க்க உதவுகிறது. வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை, மோதல்களையும் மோசமான நிலையைத் தவிர்க்க உதவும். வழக்கறிஞர்கள் தொழிலில் பலருக்கு உதவ முடியும். இப்படிப்பட்ட சமூகப் பணியை வழக்கறிஞர் அல்லாத ஒரு எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் ஞானவேல் செய்துவருகிறார்.
வழக்கறிஞர் தொழிலை மனதில் உள்வாங்கி அதை மக்களுக்கு ‘ஜெய் பீம்’ மூலம் திரைப்படமாக தந்த மிகச் சிறந்த இயக்குநர். சந்திப்பின் போது, ‘ஜெய் பீம்’ படத்தின் உரையாடல் புத்தகத்தை என்னிடம் வழங்கினார். அதைக் கடந்த வாரம் டெல்லி வந்த நம் தமிழக முதல்வரை சந்தித்த போது அவருக்கு பரிசாகக் கொடுத்தேன். முதல்வர் புத்தகம் பார்த்ததும் மகிழ்ந்தார். அவரும் சட்ட படிப்பின் மீதான ஆர்வத்தை அழகாக வெளிப்படுத்தினார். சட்டம் பயில்வோர் எண்ணிக்கை வட மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவு என கணக்கெடுப்பு ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நம் தமிழ் மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே வட இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் அன்றும் இன்றும் என்றும் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் என்பது அனைவராலும் அறியப்பட்ட உண்மை.
எனவே அடுத்த தலைமுறை மாணவர்கள் சட்டம் படிக்க வேண்டும். அரசு சட்டப் படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நம் இயக்குநர் ஞானவேல் போன்றோரின் கனவு மெய்பட வேண்டும். அவரும் அவரது படமும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரின் ‘ஜெய் பீம்’ புத்தகத்தை எனக்கு தந்து, அதை நம் முதல்வருக்கு நான் பரிசாகத் தர வாய்ப்பு அளித்த அந்த அறத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.