
அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துவா அமைப்புகள் கடும் எதிர்வினையாற்றினர். அதே சமயம் அமைச்சர் உதயநிதிக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் உதயநிதி மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது.
அந்த வகையில், ஜெகன்நாதன் என்பவர் அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, “இது குறித்து அமைச்சர் உதயநிதி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை தொடங்கிய போது, நீதிபதிகள் சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக மனுதாரர் உயர்நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும், உச்சநீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் மனுதாரரின் தொடர் வாதத்தின் காரணமாக, வழக்கை ஆராய்ந்த நீதிபதிகள், முதற்கட்டமாக நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறோம், நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்றத்தை வேண்டுமானாலும் நாடலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.