/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-malar-art_12.jpg)
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை
அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 11 போரும் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா கிளை சிறையில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் தங்களது விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என 32 கீழ் குற்றவாளிகள் தரப்பில் இருந்து அரசியலமைப்பு சட்டம் 32 கீழ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை(19.4.2024) விசாரணைக்கு வந்தபோது, “உங்களுடைய அடிப்படை உரிமை எங்கே பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் இந்த மனுவை அரசியலமைப்பு 32இன் கீழ் தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த மனு அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்ய உகந்தது அல்ல என்று கூறி குற்றவாளிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)