Skip to main content

"நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துக் கட்சியினரும் அழுத்தம் கொடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

supreme court and high court judges appointed related dravida kazhaka president statement

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (09/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்துப்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பெண்கள் ஆகியோருக்கு உரிய இடம் அளித்திடுக! அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திடுக!

 

‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் முழு எண்ணிக்கை 34; அதில் 7 நீதிபதிகளின் இடம் காலியாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன இன்றைய நிலவரப்படி. அதுபோலவே இந்தியாவின் பற்பல மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மொத்தம் 25 ஆகும். அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிரப்பப்படாத உயர்நீதிமன்ற நீதிபதிகளது இடங்கள் 430 (01/06/2021 தேதிப்படி). உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா கருத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டீஸ் என்.வி.இரமணா அவர்கள் இந்த காலி இடங்கள் வெகுவிரைவில் நிரப்பப் பட வேண்டும். 

 

அதற்கான ஒத்துழைப்பைக் கோரி பற்பல உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் மற்ற முக்கிய உயர் வட்டாரங்களிலும் பேசியது பற்றிய செய்திக் குறிப்பு ஒன்றில், ‘‘இந்த நீதிபதிகள் நியமனங்களில், நாட்டில் உள்ள பல்வேறுபட்ட பரவலான சமூக பன்முகத்தன்மையை மனதில் கொண்டு, (அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில்) நியமனங்கள் அமைவது அவசியம்‘’ என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

 

‘‘உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நிரப்பப் படவேண்டிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கையில், நாட்டில் உள்ள சமூக பன்முகத்தன்மையை அவை பிரதிபலிப்பதாகக் கொண்டு செய்வது உசிதம்‘’ என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

காலத்தின் கட்டாயமும், அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்! அதாவது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையான முகப்புரையில் வலியுறுத்தப்படும் சமூகநீதிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக தலைமை நீதிபதி அவர்கள் வற்புறுத்தியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்; அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்.

 

மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கடிதம்!

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளை நிரப்பிடும்போது மத்திய அரசின் சட்டத் துறை அமைச்சகம் சமூகநீதிக்கு முன்னுரிமை தந்து, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்டு டிரைப், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்(எஸ்சி.,எஸ்டி.,ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள்) முதலியவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைத் தகுதியுள்ள பலரும் இருக்கும் நிலையில், கவனத்தில் எடுத்துக்கொண்டு, நியமனங்கள் செய்வது அவசியம் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு 15/01/2021 அன்று அவருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட...

‘‘உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மைக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, ஷெல்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய பிரிவினரில் தகுதியானவர்களும் இடம் பெற உரிய கவனம் செலுத்தி, சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது’’ என மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் தனது 15/01/2021 தேதியிட்ட பதில் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன!

இந்த உறுதிமொழியின்படியும், தலைமை நீதிபதியின் கருத்துப்படியும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை சட்டத்துறையும், உச்சநீதிமன்றமும், இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன.

 

உச்சநீதிமன்றத்தில் நடைமுறையில் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.டி., என்ற பழங்குடி சமூகத்தினைச் சார்ந்த நீதிபதிகளே கிடையாது.

 

அதுபோலவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும் நீதிபதியே இல்லை. எஸ்.சி.,யில் ஒரே ஒரு நீதிபதி கடந்த ஓராண்டில், ஒரே ஒருவர் இருக்கும் நிலை! இவை தவிர மற்ற அத்துணை பேரும் முன்னேறிய வகுப்பினர் என்ற நிலைதானே உள்ளது. இதை சரி செய்து கொடுத்த வாக்குறுதிப்படி இனி நிரப்பக் கூடிய ஏழு இடங்களில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்களுக்கான நியமனங்களைச் செய்வதுதானே உண்மையான சமூகநீதி வழங்குவதாகும்!

 

அதேபோல, 430 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், பல உயர்நீதிமன்றங்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள் நியமனம் போதுமான அளவில்  (Adequate representation) இல்லாத நிலையை மாற்றி அமைக்கவேண்டியது நீதி பரிபாலனக் கண்ணோட்டத்திலும் சரி, சமூகநீதியை செயல்படுத்தும் வகையிலும் சரி, செய்யப்பட வேண்டியதல்லவா? மக்கள் பிரதிநிதிகள் சட்டங்களை இயற்றினாலும், இறுதி முடிவினை நீதிமன்றங்கள்தானே, குறிப்பாக உச்சநீதிமன்றம்தானே முடிவு செய்யும் நிலை உள்ளது!

 

சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே...

அங்கே, Social Diversity - சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே மக்களுக்கு மன நிறைவு தரக்கூடிய நீதி பரிபாலனம் அமைய வாய்ப்பு ஏற்படும். இதனை நாட்டில் சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரச்சினையாக எடுத்து உரிய முறையில் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்று, ஒரு தீர்வு கண்டு நீதித்துறையின் தேக்கத்தை பைசலாகாத வழக்குகளை பைசல் செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்த உடனடியாக முன்வரவேண்டியது அவசரம் அவசியம் ஆகும்!". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“திராவிடர் கழகம் தான் எனக்கு தாய் வீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dravidar Kazhagam is my mother's house says CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

 

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.