கேரளாவில் விளம்பர மாடலிங் பெண்ணாக வலம் வந்தவர் ஷஹானா(20). காசர்கோடு சிறுவத்தூரைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் ஷஹானா பெரும்பாலான நகைக்கடை விளம்பரங்களிலும் நடித்து பெண்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் சமீபத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் அதற்கான கதை கேட்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜ்ஜத் என்பவரை திருமணம் செய்துகொண்டு கோழிக்கோடு பரன்பில்வாசாிலே வாடகை வீட்டில் கணவரோடு வசித்து வந்தார். கடந்த 13-ம் தேதி ஷஹானாவின் 20ஆவது பிறந்த நாளையொட்டி அதைக் கொண்டாடும் விதமாக அவரின் பெற்றோரையும் சகோதரனையும் அழைத்திருந்தார். அவர்களும் அதில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதற்கிடையில் 12ஆம் தேதி இரவு ஷஹானாவின் வீட்டிலிருந்து கணவன் சஜ்ஜத் அழுது சத்தமிட, பக்கத்து வீட்டார்கள் அங்கு சென்று பாா்த்தபோது, சஜ்ஜத்தின் மடியில் ஷஹானா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஷஹானா ஜன்னலில் தூக்குபோட்டு இறந்து விட்டார் என சஜ்ஜத் அழுது கொண்டே இருந்தார். போலீசாரும் முதற்கட்டமாக தற்கொலை வழக்காகப் பதிவு செய்து அவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஷஹானாவின் பெற்றோர், சஜ்ஜத் தினமும் மகளை கொடுமைப் படுத்தியதாகவும், சாப்பாடு எதுவும் கொடுப்பதில்லை என்றும், அவன்தான் மகளைக் கொன்று இருக்கிறார் என்று போலீசில் கூறினார்கள். இதையடுத்து போலீசார் சஜ்ஜத்தை விசாரித்த போது அதிர்ச்சியான தகவல்கள் வந்தது. இதுகுறித்து மெடிக்கல் காலேஜ் போலீஸ் சரக உதவி கமிஷனர் சுதர்சன் கூறும் போது.... ''ஷஹானாவின் வீட்டுக்குள் கட்டில்கள் மேஜைகள் உடைந்து கிடந்தன. மேலும் கண்ணாடி டம்ளர்களும் உடைந்து சிதறி கிடந்தன. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதமும் நடந்திருப்பதும் உறுதியானது. இதனால் கொலை அல்லது தற்கொலை நடந்து இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினோம். ஆனால் அதை சஜ்ஜத்திடம் காட்டிக் கொள்ளாமல் விசாரித்தபோதுதான் அவனிடமிருந்து உண்மைகளைக் கறக்க முடிந்தது.
சஜ்ஜத் கஞ்சாவுக்கு அடிமையானவன். மேலும் உணவுப் பொருட்களுக்குள் வைத்து கஞ்சா மற்றும் மயக்க மருந்துகளை சப்ளை செய்து வந்துள்ளான். ஷஹானாவின் தொடர்பை வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் பல மாடலிங் பெண்களுக்குப் போதை மருந்துகளை சப்ளை செய்துள்ளான். இது தெரிந்ததும் ஷஹானா சஜ்ஜத்தை கண்டித்துள்ளார். ஆனால் அதை அவன் பொருட்படுத்தாததால் போலீசில் காட்டி கொடுப்பேன் என்றும் ஷஹானா மிரட்டியுள்ளார். பதிலுக்கு உன்னை கொலை செய்வேன் என்று சஜ்ஜத் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் 12-ம் தேதி ஷஹானாவுக்கு நகைக்கடை ஒன்றில் மாடலிங் செய்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் செக் வந்தது. அந்த செக்கை கேட்டு சஜ்ஜத் தொந்தரவு செய்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவள் உன்னை போலீசில் காட்டி கொடுப்பேன் என மீண்டும் கூறியுள்ளார். இதனால் அமைதியாக சஜ்ஜத் வெளியே சென்று விட்டாராம். அதன் பிறகு வந்து பார்த்தபோதுதான் ஷஹானா ஜன்னலில் தொங்கிய நிலையில் கிடந்தார்'' எனக் கூறினார்.
'இதனையடுத்து வீட்டில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் மற்றும் எம்.டி.எம்.ஏ, எல்.எஸ்.டி வகையை சேர்ந்த மயக்க மருந்துகள் இருந்ததை பறிமுதல் செய்து இருக்கிறோம். மேலும் இது சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.