Skip to main content

லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்; கையும் களவுமாகப் பிடித்த அதிகாரிகள்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

 sub registrar who took lakhs of bribes was arrested

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் பதிவுத்துறை அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம், நிலங்களைப் பதிவு செய்ய வந்த மக்களிடம் பெற்ற லஞ்சப் பணம் என்பது தெரியவந்தது.

 

மேலும் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா நாள்தோறும் அலுவலகத்திற்குப் பத்திரப் பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொது மக்களிடம் வாங்கும் லஞ்சப் பணத்தை, இரண்டு அல்லது மூன்று லட்சமாக சேர்த்து உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10 (Flate) வீட்டு மனைகள் வாங்கியுள்ளதாகவும், அதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு தான் வாங்கிய லஞ்சப் பணத்தை, ஜி-பே, வங்கி பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அனுப்பியதும் தெரிய வந்தது. அவ்வாறு 42 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியதும் தெரிய வந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று ரியல் எஸ்டேட் நில உரிமையாளரிடம்  கொடுக்க வைத்திருந்த லஞ்சப் பணமான 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது பிடித்தனர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் உதயகுமாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.

 

சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பின்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக கூறிய 3.50 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 8.10 லட்ச ரூபாய் கைப்பற்றியதாகவும்,  ஆனால் கைப்பற்றப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா? அல்லது அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட பணமா? அப்பணத்தை எங்கிருந்து கைப்பற்றினார்கள்? என விசாரணைக்குப் பின் தெரியவரும் எனக் கூறினர்.

 

மேலும் விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரை இன்று(01.09.2023) மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறினர். விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமார் ஆகியோர் இணைந்து நிலம் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி உளுந்தூர்பேட்டையில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீட்டு மனைகளை வாங்கி இருப்பதும், அதற்காக ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 42 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதும் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

சென்னையை உலுக்கிய வழக்கில் பல வருடங்கள் கழித்து கிடைத்த தீர்ப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The verdict came after many years in the case that rocked Chennai

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் கே.கே.நகரில் கல்லூரியில் பயின்று வந்த கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் அந்த இளைஞருக்கு அபாரதத்துடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது அழகேசன் என்ற இளைஞரால் கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

மதுரவாயல் பகுதியைச்சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் கே.கே.நகர் மேற்கில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம். பயின்று வந்தார். தந்தை இல்லாத நிலையில் தாய்தான் அவரை படிக்க வைத்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடைசிவரை அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன்,  அஸ்வினியின் வீட்டு வாசலில் வைத்தே கட்டாய தாலி கட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் அழகேசனை விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதன்பின்னரும் அஸ்வினியை தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் அழகேசன். இதனால் மதுரவாயல் பகுதியை விட்டு, உறவினர் வீடான ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்து அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றார் அஸ்வினி.

இந்நிலையில் 09/03/2018 அன்று மதியம் 2.30 மணியளவில் கல்லூரி முடிந்து வெளியே வந்து, லோகநாதன் தெருவில் நடந்து சென்ற அஸ்வினியை மறித்து காதலை ஏற்கச்சொல்லி வற்புத்தினான் அழகேசன்.  அஸ்வினி மறுக்கவே, சற்றும் எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தை அறுத்தான் அழகேசன். இதில், அலறித்துடித்த அஸ்வினி ஓட முயற்சித்தார். ஆனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அழகேசனை பிடித்து கடுமையாக தாக்கினர்.   அடித்து உதைத்து கை, கால்களை கட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அழகேசனை பொதுமக்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அந்த நேரத்தில் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை சென்னை அள்ளிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஃபாரூக் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அழகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.