Skip to main content

“நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
Su Venkatesan MP. Request Judges vacancies should be filled

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எத்தனை உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை முழு அளவில் நிரப்பப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை எவ்வளவு? என்று மத்திய அமைச்சரிடம் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பதிலளித்திருக்கிறார்.

இது குறித்து சு.வெங்கடேசன் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “ உயர்நீதி மன்றங்களில் 32 % நீதிபதி காலியிடங்கள்;  61 லட்சம் வழக்குகள் நிலுவை. இந்திய நீதித்துறையில் எளிய, நடுத்தர மக்கள் நீதி பெறுவதற்கு நெடிய காலம் காத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளதை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். உயர்நீதி மன்றங்களில் 32 % நீதிபதி காலியிடங்கள்.

நான் நாடாளுமன்றத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சத்திடம் எழுதிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அளித்துள்ள பதில் நீதிபதிகள் காலியிடங்கள், நிலுவை வழக்குகள் பெருமளவில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எனது கேள்விகள் எத்தனை உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை முழு அளவில் நிரப்பப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டிருந்தேன்.

அமைச்சர் பதிலளிக்கும் போது, 25 உயர்நீதிமன்றங்களில் சிறிய மாநிலங்களான மேகாலயா சிக்கிம் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே முழு எண்ணிக்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த நீதிபதி பணியிடங்களான 1,122 இல் 757 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 32 சதவீத காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மொத்தத்தில் 61 லட்சம் வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 10,67,614 வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது 160 நீதிபதி பணியிடங்களில் 81 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சி தருகிறது. குஜராத்தில் 52 பணியிடங்களுக்கு 32, ராஜஸ்தானின் 50 பணியிடங்களுக்கு 30 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் சென்னை உயர்நீதிமன்றம் பரவாயில்லை. 75 பணியிடங்களில் 66 நிரப்பப்பட்டு உள்ளது. 

இதில் கவலைக்குரிய அம்சம், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 61 லட்சம் வழக்குகளில் 27 லட்ச வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவை ஆகும். அதாவது 44 சதவீத வழக்குகள். உச்ச நீதிமன்றத்தில் 19,569 வழக்குகளும், மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் 1,15,96,339 வழக்குகளும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றங்கள் வரை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 1.43 கோடி ஆகும்.

அமைச்சரின் பதிலில் உள்ள விவரங்கள் இந்திய நீதித்துறையில் சாமானிய நடுத்தர மக்கள் நீதி பெறுவதற்கு நெடிய காலம் காத்திருக்க வேண்டும் என்கிற எதார்த்தம் வெளிப்படுகிறது. உடனடியாக இதில் கவனம் செலுத்தப்பட்டு நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்”எனக் கோரிக்கை வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்